03:42
3


அதிகரித்த தொழிநுட்ப அறிவினால் ஏற்பட்ட போக்குவரத்து சாதனக் கண்டுபிடிப்பால் அதிகளவு நன்மைகளை நாம் அனுபவிக்கின்ற போதிலும் அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களையும் எதிர்கொள்வது தவிர்க்க முடியாதொன்றாகும்.சர்வதேச ரீதியாக விபத்துக்கள் குறைவடைந்து கொண்டு செல்கின்ற அதே வேளை ஆசிய நாடுகளில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றமை அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாகவே கருதப்படுகிறது.இலங்கை போன்ற சிறிய நாடொன்றில் அதனது சனத்தொகையுடன் ஒப்பிடும் போது அதனை விட அதிகரித்த வீதி விபத்துக்கள் ஏற்பட்டிருப்பதை புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிகிறது. இலங்கையில் சராசரியாக நாளொன்றிற்கு 150 விபத்துக்கள் இடம் பெறுகின்றன. அவ்விபத்துக்களில் 5-7 வரையானவை மரணங்கள் ஏற்படுகின்றன. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்.இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் இவ் வீதி விபத்துக்கள் பாரிய நெருக்கடியை தோற்றுவிக்க கூடியதொன்றாகும். குறிப்பாக சமூக பொருளாதார சுகாதாரப் பிரச்சினைகளை இவ் வீதி விபத்துக்கள் தோற்றுவிக்கின்றன. இலங்கையில் ஏற்படும் வீதி விபத்துக்களில் 75 சதவீதமான விபத்துக்களுக்குமனிதர்களின் கவனயீனமே பிரதான காரணமாக அமைந்து விடுகின்றது.வீதி விபத்துக்கள் ஏற்படுவதற்கு பல காரணிகள் இனங்காணப்பட்டுள்ளன. வாகன விபத்துக்கள் ஏற்படுவதற்கான மூல காரணங்களாக பின்வரும் சில காரணிகளை அனுமானிக்கலாம்.
  1.  வீதிப்போக்குவரத்து விதிகளைச் சாரதிகளும், தெருக்களை உபயோகிப்பவர்களும் சரியாக அனுசரியாமை.
  2.  கவனயீனமாக வாகனங்களைச் செலுத்துதல் / குழப்பமான மனநிலை.
  3. அதி வேகத்ததுடன் வாகனங்களைச் செலுத்துதல்.
  4. வீதிகளில் செல்வதற்குத் தகுதியற்ற வாகனங்களின் பாவனை.
  5. விபத்துக்கள் ஏற்படக்கூடும் என உணரப்படும் இடங்களில் முன்னெச்சரிக்கையுடன் அவதானமாக உரிய முறையில் வாகனங்களைச் செலுத்தாமை.
  6. பாதுகாப்பான இடைவெளியில் வாகனங்களைச் செலுத்தாமை.
  7. இயலுமானவரை தனது வாகனம் செலுத்தும் ஒழுங்கை/ போக்குவரத்து விதி முறைகளை சரியாகப் பேணாமை.
  8. பாதுகாப்பான முந்திச் செல்லும் முறைகளைக் கடைப்பிடிக்காமை.
  9. இதற்கு முன்னர் தான் எந்தவொரு விபத்தையும் சந்திக்கவில்லை என்ற மனோநிலையில், தான்தோன்றித்தனமாக வாகனத்தை செலுத்துதல்.
  10. வாகனங்களின் கொள்ளளவிற்கு அதிகமான சுமையை ஏற்றுதல்


மேற்குறிப்பிட்டவை தவிர ஏனைய சில காரணிகளும் வீதி விபத்துக்களுக்கு காரணமாகி அப்பாவி உயிர்களைக் காவு கொள்கின்றன.

மேலும் பாதசாரிகள் விபத்துக்களை தவிர்த்து கொள்வதற்கென முக்கிய இனங்காணப்பட்ட இடங்களில் மஞ்சல் கோடுகளை போக்குவரத்து அமைச்சு அமைத்துள்ளது. எனினும் சமிக்ஞைகளுக்கு காத்திருக்காமல் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் இடைவெளிக்குள் நுழைய முற்பட்டு விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதுண்டு. மேம்பாலம் சுரங்கப்பாதைகளும் மக்கள் செறிவாக காணப்படும் வீதியை கடக்கும் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் கவனயீனம்,  அவசரம், இலகுவாகவும் வேகமாகவும் வீதியைக் கடக்க வேண்டும் என்ற பதற்றம் பாதசாரிகளின் நெரிசல் போன்ற காரணிகளால் மக்கள் அவற்றைப் பயன்படுதுவதைத் தவிர்ப்பதால் வீதி விபத்துக்களுக்கு காரணிகளாக அமைந்து விடுகின்றன.

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதில் உள்ள முறை கேடுகள். முறையான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குப் பதிலாக இலஞ்சம் ஊழல் முறைகளைப் பின்பற்றி சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளும் வழிமுறை இன்னும் இலங்கையில் சட்டவிரோதமாக நடைபெற்றுவருகின்றது. நாட்டில் அவ்வப்போது சுற்றிவளைக்கப்படும் போலிக்கச்சேரிகள் இதற்கு சான்று பகர்கின்றன. இத்தகைய சாரதிகளால் பெரும்பாலான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுவதால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுவது போல் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனங்களைசெலுத்துவதாலும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றது. இத்தகைய விபத்துக்களின் பின்புலத்தை கண்டறிந்தும் குறித்த சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்காததன் விளைவு, மற்றுமொரு விபத்துக்கு வழிகோலுகின்றது.

சில போக்குவரத்துப் பொலிசாரின் இலஞ்சம் பெறும் கீழ்த்தரமான நடவடிக்கைகள் காரணமாக மோசமான சாரதிகளும் இலகுவாக தப்பித்துக் கொள்ளவும், தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் காரணமாக அமைந்து விடுகின்றன. மேலும் இலங்கையில் வாகனத்தை செலுத்தும் அதி வேக முறைகள் நகரங்களில் மட்டும் பொருத்தப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சாரதிகள் அவற்றை கவனத்திற்கொள்வதே இல்லை.

வளர்ச்சியடைந்த நாடுகளில் சாரதிகளின் கவனத்தைக் கவரும் பொருட்டு ‘நியோன்’ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வாகன வீதி வேகத்தடைகள் பொருத்தப்பட்டிருப்பது போல் இங்கும் அவை நடைமுறைக்கு கொண்டு வருதல் மூலம் விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கலாம்.
இலங்கையில் வேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்காணிக்கவென போக்குவரத்துப் பொலிசாரும் கருவிகளும் தேவையை விட குறைவாகவே காணப்படுகின்றன.

பொலிசாரின் கண்காணிப்பை தன் சக சாரதிகளுக்கு சமிக்ஞை (PASS LIGHT) மூலம் அடையாளப்படுத்தும் சாரதிகளின் நடத்தையும் விபத்துக்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றன. போக்குவரத்துப்பொலிசார் நிற்கும் இடங்களில் வேகம் குறைத்து மீளவும் அதி வேகமாக வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்கானிக்கவும் அதிகபட்ச தண்டனைப்பெற்றுக் கொடுக்கவும் இலங்கை போக்குவரத்து சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இலஞ்சம் பெறாத அதிகாரிகளால் பெரும் சதவீதமான விபத்துக்களை குறைக்க வழியுண்டு.

இலங்கையில் காணப்படும் கட்டுப்பாடற்றவாகனங்களின் இறக்குமதியும் வீதி விபத்துக்களுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்வதால் அதிலும் சில கட்டுபாடுகளை விதிக்கலாம்.
தற்போது காணப்படும் சீரான வீதிகள் சாரதிகளின் வேகத்தை தூண்டுவதையும் வாகன விபத்திற்கு ஒரு காரணியாக கொள்ள முடியும்.

மேலும் வாகன விபத்திற்கு தற்போது காணப்படும் உஷ்னமான காலநிலையையும் ஒரு மறைமுக காரணியாக குறிப்பிடலாம். மேலும் அரசாங்கம் மக்கள் மத்தியில் விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் மூலம் வீதி விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம்.

வீதி ஒழுங்குகளையும், போக்குவரத்து விதிகளையும் பேணி நடப்பதுவே எமதுயிரை காக்க நாம் மேற்கொள்ளும் இறுதி முயற்சியாகும். ஒக்டோபர் மாதம் 26ம் திகதி "உலக வீதி விபத்து தவிர்ப்பு தினம்" அணுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments: