03:40
0

பூமி தோன்றி சுமார் 450 கோடி ஆண்டுகளும், உயிர்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகளும், மனித இனம் தோன்றி 50 லட்சம் ஆண்டுகளும் ஆகின்றன. பூமி தோன்றியதிலிருந்தே, பல்வேறு இயற்கை நிகழ்வுகளாலும், காலநிலை மாற்றங்களாலும், பேரிடர்களாலும் பூமிக்கு ஆபத்தும் அழிவும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
பூமி வெப்பமடைந்தும, வளிமண்டலம் சிதைவுற்றும் உயிர்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்தைத் தவிர்க்கவும் குறைக்கவும், இயன்றளவு மட்டுப்படுத்தவும்  மக்களிடையே விழிப்பு உணர்வுப் பிரச்சாரம் செய்ய உருவானதுதான் உலகப் புவிதினம்!
அதிகரித்துச் சென்ற இயற்கை அழிவுகள் காரணமாக, சுற்றாடல் தொடர்பில் மக்கள் மத்தியில்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் ஏப்ரல் 22ஆம் திகதி உலக புவித் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நாளில் வருடாந்தம் பாரிய அளவில் விழிப்புணர்வு ஊர்வலங்கள், கல்வி திட்டங்களின் அறிமுகம் போன்ற செயற்பாடுகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது. எனினும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு தினங்களில் உலக புவித் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் மார்ச் 21 ஆம் திகதி உலக புவித் தினமாக கொண்டாடப்படுகின்றது.
உலகில் இயற்கையாக ஏற்படும் மனித உயிரிழப்புகளைப் பார்க்கிலும் இயற்கை அனர்ந்தங்களின் மூலம் ஏற்படும் உயிழப்புகளே அதிகம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இதன் மூலம் மனிதன் இயற்கையில் இருந்து எவ்வளவு தூரம் அந்நியப்படுத்தப்பட்டுள்ளான் எனபதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பூமியின் வெப்பம் உயர்ந்து வருகிறது. காலநிலைகள் மாறுகின்றன. பனிப்பிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன. அதனால் கடலில் நீர்மட்டம் உயர்கிறது. நீர் மட்டம் உயர்ந்தால் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இந்தச் சூழல் கேடுக்கு முக்கியக் காரணம் மனிதர்கள் என்பதால், பூமியைக் காப்பாற்றும் பொறுப்பும் கடமையும் நமக்கே இருக்கிறது.
எனவே இன்றைய புவித் தினத்தில் புவி பற்றிய சிந்தனைக்கு சில நேரங்களை ஒதிக்கிக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வளங்களை விரைவாக இழந்து வருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூடநச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது.  தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் இப்புவி தினம் உருவாக காரணமாக இருந்த அமெரிக்க செனற்றர் நெல்சன். காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பல காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் காலநிலைக் காரணிகள்  மாறிவருவதுடன் இயற்கை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது. ஒரு விழிப்புணர்விற்காக உதாரணமாக வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும், இது போன்ற செயற்திட்டங்களை பாடசாலைகளில் முன்னெடுப்பதனூடாக எமது புவிப் பாதுகாப்பிற்காக நாம் கட்புலனுக்கு உணராவிடினும் பாரிய பலனை அடைந்து கொள்ள முடியும்.
மேலும்  வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் குழல் பல்புகளைப் பயன்படுத்தலாம், தேவை இல்லாத போது மின் சாதனங்களை அனைத்து விடலாம், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் இயன்றளவு தவிர்க்கலாம்,  காகிதங்களைச் சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்த முயற்சிக்கலாம், தனி வாகனங்களைத் தவிர்த்து பேருந்து, ரயில் போன்ற பொது
வாகனங்களைப் பயன்படுத்தலாம் அல்லது முறையான வாகனப் புகைப் பரிசோதனை மூலம் புகை கக்கும் வாகனங்களைத் தவிர்க்கலாம், பிளாஸ்டிக் குப்பைகள், வாண
வேடிக்கைகள் போன்றவற்றை தவிர்ப்பதோடு எரியூட்டுவதையும் குறைக்கலாம்.
மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளில் சில நடைமுறைச் சாத்தியமில்லாதவை இருப்பினும் அவற்றை நடைமுறைப்படுத்த எத்தனிப்பது நாம் வாழும் புவிக்கு நாம் வழங்கும் பங்களிப்பாகும்.
இன்றைய புவித் தினத்தில் இந்தியாவின் அணு விஞ்ஞானி டாக்டர்.ஏ.ஜே.பி.அப்துல் கலாம் தனது பேஷ் புக் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
” நாம் புவியில் இருந்து எடுக்கிறோம், எடுக்கிறோம், எடுத்துக் கொண்டே இருக்கிறோம். எம்மை நாமே கோட்டுக் கொள்ள வேண்டும் இப் புவிக்கு திருப்பி பகரமாக எதை செய்கிறோம், இன்றைய தினத்தில் நாம் ஒரு நோக்கத்தை கைக் கொள்ள வேண்டும். ஞாபகப்படுத்துங்கள் ஒரு மரம் ஒரு வருடத்திற்கு என்ன செய்கிறது?
ஒரு மரம் 20 கிலோ கிராம் காபனீரொட்சைட்டை உறிஞ்சி 14 கிலோ கிராம் ஒக்சிசனைப் புவிக்கு வழங்குகிறது. இதைப் போல புவிக்கு பங்களிப்பு செய்ய என்னோடு இணையுங்கள்”
இறுதியாக
பூமியை மாற்றுவோம்
எங்கும் பச்சை
எதிலும் பச்சையாய்
பனித்துளிகளில் நீராடி
புல்வெளிகளில்
படுத்துக்கொள்வோம்.



ஏப்ரல் 22 அன்று உலக புவி தினத்தை முன்னிட்டு கல்குடா முஸ்லீம்ஸ் இணையத்தளத்தில் என்னால் எழுதப்பட்டு பிரசுரமானது.

0 comments:

Post a Comment