03:32
0

கடல்பரப்பு, முருகைக்கற்பாறைகள், கடற் தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின்  இயற்கை வனப்பும், உல்லாச விடுதிகளும், கிடுகுகளால் அழகுற,நேர்த்தியாக வேயப்பட்ட “கபாணா” என்றழைக்கப்படும் உல்லாச விடுதிகளும், படகுச் சவாரிக்கு ஏற்ற கடலும், வெளிநாட்டு, உள்நாட்டு சமூகங்களின் நல்லுறவும் பாசிக்குடாவை ரசிக்கத் தூண்டும் காரணிகளாகும். கடந்த கால வன்செயல்கள் பாசிக்குடாவை சோலையிழந்த நிலமாக மாற்றிவிட்டிருந்தது. எனினும் தற்போதைய சமாதான சூழல் இயற்கை அழகை மீண்டும் சுதந்திரமாக ரசிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில் தோன்றிய இன முரண்பாடு சிங்கள,தமிழ்,முஸ்லிம் இன நல்லுறவைப் பாதித்தது. ஆனால் தற்போது பாசிக்குடாவில் அந்நிலைமை எதிர்மறையாகியுள்ளதை அவதானிக்கலாம். பாசிக்குடாவில் பல்லின மக்களும் கூட்டாக உல்லாசம் அனுபவிப்பதை அவதானிக்க முடிகிறது. இலங்கையின் நாலா திசைகளில் இருந்தும் சகல இன சகோதரர்களும், வெளிநாட்டு உல்லாசப் பயனிகளும் இவ் விடுமுறை காலங்களிலும் அதை விட ஏனைய காலங்களின் வார இறுதி நாற்களிலும் வருகை தருவதை காண முடிகிறது. குறிப்பாக கொழும்பு, வவுனியா, திருகோனமலை, காலி, பொலனறுவை, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல் போன்ற பிரதேசங்களில் இருந்து குடும்பம் குடும்பமாகவும், பாடசாலைச் சுற்றுலாக் குழுக்களாகவும், நன்பர் குழுக்களாகவும் வருகைதருகின்றனர். வார இறுதி நாட்களில் சுமார் 4000 தொடக்கம் 6000 வரையான உல்லாசப் பிரயானிகள் சாதி, மத, இன, மொழி பேதமின்றி கூடுவதாக அங்கிருக்கும் சில்லறை வியாபாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.


அங்கிருந்த சில சகோதரர்களிடம் கருத்துக்களைப் பெற முயற்சித்த போது…
பாசிக்குடாவிற்கு அண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில்  தாம் பாடசாலைப் பருவத்தில் இருந்து வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக பாசிக்குடாவிற்கு வருகை தருவதாகவும், யுத்த சூழல் காரணமாக அது தடைப்பட்டிருந்ததாகவும் ஆதங்கப்பட்ட அவர் தற்போது நிலைமை சீராகியுள்ளதால் மறுபடியும் அவ்வாறாதொரு வாய்ப்புக் கிடைத்தமையையிட்டு மகிழ்வதாகவும் தெரிவித்தார்.


சிங்கள சகோதரர் ஓருவர் தற்போது இரவிலும் பயணம் செய்யக் கூடியதாகவுள்ளதால் இயற்கை அழகை சுதந்திரமாக அனுபவிக்கும் வாய்ப்புக் கிட்டியிருப்பதாகவும், இங்கு நீராடும் போது மனதிற்கு சந்தோசமும் புத்துணர்ச்சியும் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
சில்லறை வியாபராம் செய்யும் தமிழ் தாய் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது…
கடந்த காலங்களில் கனவனை இழந்து பொருளாதார ரீதியாக ஸ்திரமற்றிருந்ததாகவும் தற்போது உல்லாசப்பிரயாணிகளின் அதீத வருகையால் தனது பொருளாதாரம் ஸ்திரம் அடைந்திருப்பதாகவும் கூறினார். இங்கு இவர் போன்ற ஏராளமான சில்லறை வியாபரிகளை காணக் கூடியதாக உள்ளது.
மேலும் இப்பிரதேச மக்கள் வருகைதரும் உல்லாசப் பிரயாணிகளுடன் இன நல்லுறவுடனும் சகோதர மனப்பான்மையுடனும் பழகுவதைப் பார்க்கும் போது கடந்தகால யுத்தம் அர்த்தமற்றதாகி விடுகிறது.


பாசிக்குடாவின் உவர் தன்மையினால் இங்கு நீராடுவதன் மூலம் தோல் வியாதிகள் சிலவற்றைக் குணப்படுத்தும் மருத்தும் குணம் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறாக உல்லாசப் பிரயானிகளின் வருகை அதிகரித்துள்ளமை பொருளாதார ரீதியாகவும் இப்பிரதேசங்கள் மேன்மையடைய வாய்ப்புக்களைத்தோற்றுவித்துள்ளது. வானுயர்ந்த அதி நவீன வசதி கொண்ட விடுதிகள், உணவகங்கள் அமைக்கப்படுகின்றன. முதலீடுகள் அதிகரித்துள்ளது. மேலும் படகு சவாரி போன்ற உல்லாசப் பிரயாணிகளை கவரும் தொழிற்துறைகளும் அதிகரித்துள்ளது.


எனினும் பாசிக்குடாவில் அதிகரித்த உல்லாசப் பிரயானிகள் காரணமாக அதிகரித்த பொலித்தீன் பாவணை, சுண்ணாம்புக்கல் அகழ்வு போன்ற சுற்றாடல் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் மாசு, இயற்கை அழகு குறைவு, உயிர்ப்பல்வகைமை அழிவு போன்ற சிக்கல்கள் தோன்றியுள்ளது. மேலும் கலாச்சார சீரழிவுகளும் தலைதூக்கியுள்ளதை மறுக்கமுடியாது. வரும் உல்லாசப் பிரயாணிகளை விட சீரழிவுகள் அதிகரித்துள்ளது. அதிகரித்த மதுப் பாவணை,போதைப்பொருள் பாவணை, பாலியல் ரீதியிலான தவறான அணுகுமுறைகள் போன்றன அவற்றுள் சில கலாச்சார சீரழிவுகளாகும். சமூக, மத ரீதியான குழுக்கள் கலாச்சார சீரழிவுகளை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை. 

இதற்குப் பிரதான காரணம் ஓய்வு காலத்தை கழிக்கவென பிரத்தியோக தளம் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் அமைக்கப்படாததாகும். இருந்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் சீரழுவுகளை கட்டுப்படுத்த முடியுமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வெளிநாட்டு உல்லாசப் பயனிகளின் அதிகரித்த வருகைதான் கலச்சார சீரழிவின் சீராக்கத்திற்கு பலத்த சவாலாக உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எது எவ்வாறாயினும் வளங்கொழிக்கும் இயற்கை வனப்பும், கடற்பரப்பும் பொதுமக்களின் அனுபவிப்புக்குரியதாகியுள்ளது. இங்கு விஜயம் செய்யும் பல்லின மக்கள் கூட்டம் இன நல்லினக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைகிறது. பாசிக்குடா இன்றைய சூழலில் பல இன மக்களை ஒன்றிணைக்கும் உறவுப்பாலமாகத் திகழ்கிறது.
                     
                    

  

0 comments:

Post a Comment